புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 750 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அதே வீட்டில் பின்புறத்திலுள்ள உறைகிணற்றில் இருந்து நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 750 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அதே வீட்டில் பின்புறத்திலுள்ள உறைகிணற்றில் இருந்து நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அறந்தாங்கி அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் புருணை நாட்டில் சூப்பர் மார்க்கெட் வைத்து, குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருப்பதால் கிராமத்தில் உள்ள இவரது வீட்டினை அக்கா ஷாயிஷாவை பராமரித்து வந்துள்ளார். அவ்வப்போது சொந்தஊரான கோபால பட்டினத்திற்கு வந்து ஜாபர் சாதிக் தனது குடும்பத்துடன் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்குப் முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜாபர்சாதிக் தனது அக்காவிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது அக்கா ஷாயிஷா தினந்தோறும் வீட்டின் முகப்பு விளக்கை மாலையில் போட்டுவிட்டு காலையில் அமர்த்திச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டில் அட்டைப்பெட்டியில் இருந்த 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணத்தினை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளர் ஜாபர்சாதிக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவரது வீட்டில் 750 பவுன் நகை இருந்ததாகவும் அவை அனைத்தும் கொள்ளைபோனதாகவும் ஜாபர் சாதிக்கின் உறவினர் முகமது உசேன் என்பவர் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் வீட்டின் பின்புறமுள்ள உறை கிணற்றில் ஜகுபர் சாதிக்கின் உறவினர்களும் போலீசாரும் பார்த்த போது, ஒரு கேரி பேக் இருந்ததைக் கண்டு வெளியில் எடுத்தனர். அதில் வீட்டில் கொள்ளைப்போன 559 சவரன் தங்க நகை இருந்ததையடுத்து அவை, மீட்கப்பட்டன. இதனிடையே கிணற்றில் மீட்கப்பட்ட நகைகள், மீமிசல் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக டிஎஸ்பி தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
