எலி கடி பிரச்சினை குறித்த புகார் எழுந்ததை அடுத்து ஐ.சி.யு. பிரிவு தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். 

தெலுங்கானாவின் வாரங்கல் எம்.ஜி.எம். அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு.-வில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான நோயாளி எலி கடித்ததால் உயிரிழந்தார். வாரங்கல் எம்.ஜி.எம். மருத்துவமனையில் எலி கடித்ததை அடுத்து நோயாளி ஐதராபாத்தில் உழள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

உடல்நிலை கவலைக்கிடம்:

"எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட நோயாளியின் கணையம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த வந்த நிலையில், இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. ஒருமுறை தனியார் மருத்துவமனையிலும், மறுமுறை எம்.ஜி.எம். மருத்துவமனையிலும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது."

"இதுதவிர நிம்ஸ் அழைத்து வரும் போதே வழியில் இவருக்கு மீன்டும் மாரடைப்பு ஏற்பட்டு, மிகவும் மோசமான உடல்நிலையிலேயே இங்கு கொண்டுவரப்பட்டார். நிம்ஸ்-இல் அனுமதிக்கப்படும் போது இவரின் பல்ஸ் மற்றும் இரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்தது. இதுபோன்ற உடல்நிலை குறைபாடுகள் காரணமாகவே இவர் உயிரிழந்தார். இவர் உயிரிழக்க எலி கடி காரணம் இல்லை," என நிம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கே. மனோகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

அதிர்ச்சி:

எம்.ஜி.எம். மருத்துவமனையில் அரங்கேறிய எலி கடி பிரச்சினை குறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயிரிழந்த நோயாளி ஸ்ரீனிவாஸ் சகோதரர் ஸ்ரீகாந்த், "இந்த சம்பவம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெற்றது. இது எங்கள் தலைவிதி என நாங்கள் நினைத்தோம். இதில் கவலை அடைவதை தவிர வேறு என்ன செய்வது என தெரியவில்லை. இந்த முறை எலி கடித்த போது, என் சகோததருக்கு அளவுக்கு அதிகமாக இரத்தம் வெளியேறியது. படுக்கை முழுக்க இரத்தமாகி விட்டது. இதனால் தான் நான் புகார் அளித்தேன்," என அவர் தெரிவித்தார். 

நடவடிக்கை:

"ஐ.சி.யு.வில் எலி கடி பிரச்சினை குறித்த புகார் எழுந்ததை அடுத்து ஐ.சி.யு. பிரிவு தலைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் மருத்துவமனையின் எஸ்.ஐ. டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார். இதோடு பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் சுகாதார பணிகளை கவனித்து வந்த காண்டிராக்டர் நீக்கப்பட்டு இருக்கிறார்," என மருத்துவமனைக்கு விரைந்து வந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்தார். 

ஐ.சி.யு.வின் கழிநீர் குழாயில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அங்கு எலிகள் சுற்றித் திரிகின்றன. இங்கு எலி கடி பிரச்சினை மிகவும் சாதாரண விஷயம் என அங்குள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். "கழிவுநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், எங்களால் இதுவும் செய்ய முடியாது. சில நிமிடங்கள் அசந்தாலும், எலிகள் அந்த பகுதியை துவம்சம் செய்து விடுகின்றன," என்று மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தெரிவித்தார்.