ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 35, பரோட்டா மாஸ்டர். இவரது மனைவி பாக்கியலட்சுமி, 25. இவர்கள், கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பெல்லந்துாரில் தங்கி, அப்பகுதியில் உள்ள ஓட்டலில், சுப்ரமணி பணிபுரிந்தார். கடந்த, 13-ம் தேதி காலை, பாகலுார் சயத்ராவனம் லே - அவுட் அருகே, எரிந்த நிலையில், சுப்ரமணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணியை கொன்றது யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், அவரது மனைவியின் திட்டப்படி, கள்ளக்காதலனே சுப்பிரமணியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக சரத்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பெல்லந்தூரில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து அந்த பகுதியில் மனைவியுடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த சுப்பிரமணிக்கும், பானிபூரி கடை நடத்தி வந்த சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சுப்பிரமணி, மனைவியை கண்டித்து 3 மாதத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான நாரலபள்ளிக்கு அழைத்துச்சென்று வீட்டில் விட்டு பெங்களூரு திரும்பினார். இந்நிலையில் பாக்கியலட்சுமியும், சரத்குமாரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

 

இந்நிலையில் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்பிரமணியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 10-ம் தேதி பாக்கியலட்சுமியை சந்திப்பதற்காக சரத்குமார் நாரலப்பள்ளி சென்றார். அப்போது பாக்கியலட்சுமி, தனது கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் சரத்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் பெங்களூரு திரும்பிய சரத்குமார், புதிய தொழில் செய்வது தொடர்பாக பேசலாம் வா என்று கூறி சுப்ரமணியை, தன் பைக்கில் சரத்குமார் அழைத்து வந்துள்ளான். வரும் வழியில், இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும், சுப்ரமணியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சரத்குமார், சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். இது தொடர்பாக அவரது மனைவி பாக்கியலட்சுமியிடம் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.