மனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து பேசியதால் கார்பெண்டரை அடித்துக்கொன்றேன் என்று கட்டிட தொழிலாளி ஒருவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கோகுல கண்ணன் திருப்பூர் காங்கயம் ரோடு விஜயாபுரத்தில் தங்கி வீடுகளுக்கு ஜன்னல், கதவு செய்யும் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுலகண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கோகுலகண்ணன் கொலையான நாள் முதல் அவரது நண்பர் சுரேஷ் என்பவர் மாயமானார். அவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சுரேசை தேடி வந்தனர். இந்நிலையில் சுரேஷ் நேற்று பிடிபட்டார். போலீசார் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணையில் கோகுல கண்ணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும், சுரேஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். அப்போது கோகுல கண்ணன் வீடுகளுக்கு ஜன்னல், கதவுகள் பொருத்தும் வேலை செய்து வந்தார். எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்தோம். எங்களின் நட்பு நெருக்கமானதால் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார்.

அப்போது எனது மனைவி மற்றும் கொழுந்தியாளிடம் சிரித்து சிரித்து பேசினார். இது எனக்கு கடுப்பை கிளம்பியதால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவனைப்பற்றி நான் எனது  மனைவியிடம் கேட்டபோது அவர் என்மீது கோபப்பட்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நான், சம்பவத்தன்று  கோகுல கண்ணன் மற்றும் மற்றொரு நண்பர் மணிகண்டன் சேர்ந்து சரக்கடித்தோம். பின்னர் மணிகண்டன் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், கோகுல கண்ணனும் எனது வீட்டுக்கு வந்தோம். அப்போது அரை போதையில் இருந்த நான், எனது மனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து சிரித்து பேசியது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் கிடந்த  உருட்டுக் கட்டையால் கோகுல கண்ணன் மண்டையிலேயே வச்சு தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவனை, மற்றவர்களுடன் சேர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு நான் எஸ்கேப் ஆனேன் எனக் கூறினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுரேசை செய்து சிறையில் அடைத்தனர்.