சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவனை நாம் கேட்டபோது, "ஏற்கனவே, செண்ட்ரல் இரயில்நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சிப்போல... எழும்பூர் ரயில்நிலையத்திலும் வருகிறது' என்று இரகசிய தகவல் கொடுத்தவர்தான் இந்த தகவலையும் கொடுத்தார். அந்த, நம்பகத்தன்மையின் அடிப்படையில்தான் எழும்பூர் ரயில்நிலையத்திலும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டோம்.  சனிக்கிழமை காலை  10:15 மணிக்கு வந்த பார்சலை 1 மணி ஆகியும் யாரும் பார்சலை எடுக்கவரவில்லை. 

அதற்கு பிறகே, எழும்பூர் இரயில்நிலைய இயக்குனரின் கவனத்துக்குக் கொண்டுசென்று பிரித்து பார்த்தபோது ஆட்டுக்கறிபோல் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், ஆட்டுத்தொட்டியில் வெட்டப்பட்டதற்கான சீல் இல்லை. கால்நடை மருத்துவரின் பரிந்துரைக் கடிதமும் இல்லை. மேலும், ஈக்கள் மொய்த்து நாற்றம் வீசியதுடன் இறைச்சி கெட்டுப்போயிருந்தது. குறைந்தவிலைக்கு ஜோத்பூரிலிருந்து இறக்குமதி செய்து மிகவும் தரம் குறைந்த இறைச்சிகளை சென்னை ஹோட்டல்களில் வினியோகிப்பது தெரியவந்தது. அதனால், அந்த,  இறைச்சிகளை அழித்தோம்.

அதற்குள், நாய்க்கறி என்று ஊடகங்களில் பரபரப்பாகிவிட்டது. நாய்க்கறி என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜோத்பூரிலிருந்து வரக்கூடிய கறியானது உண்ணத்தகுந்தது அல்ல என்பது உறுதி. இருந்தாலும் ஆட்டுக்கறிதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவு வந்தால்தான் எதையும் உறுதியாக சொல்லமுடியும்" என்றார்.

இந்நிலையில், கறிப்பார்சல்களில் 5 பாக்ஸ்களை புக்கிங் செய்திருந்த சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த ஷகிலாபானு என்பவர், "ஜோத்பூரிலிருந்து வந்ததுநாய்க்கறி அல்ல. திட்டமிட்டு யாரோ வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். இதனால், எங்களது வியாபாரமே பறிபோய்விட்டது. ஜோத்பூரிலுள்ள ஆடுகள் இப்படித்தான் இருக்கும். ஆய்வக பரிசோதனையில் உண்மை தெரிந்துவிடும்" என்கிறார் உறுதியான குரலில்உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கறியானது பரிசோதனைக்காக கடந்த 2018 நவம்பர்-17 ந்தேதி சனிக்கிழமை அனுப்பப்பட்டது. 

இன்னும் பரிசோதனை முடிவு தாமதம் ஆவது ஏன்? என்று கால்நடை மருத்துவக்கல்லூரியின் 'கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை (இறைச்சி அறிவியல்) தலைவரும் பேராசிரியருமான டாக்டர் அப்பாராவிடம் நாம் கேட்டபோது, "டி.என்.ஏ. பரிசோதனை வரை பலவிதமான பரிசோதனைகள் செய்வதால் தாமதமாகிறது. நாளை செவ்வாய் கிழமை பரிசோதனை முடிவு வந்துவிடும்" என்றார்.