ஆன்லைனில் ஐபோன்களை மொத்தமாக வாங்கித் தருவதாகக் கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்த தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் - மங்கலம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்ப்பவர் ஜெகதீஷ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்,  மொத்தமாக ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்கு ஆன்லைனில் தேடினார். 

அப்போது, மும்பையை சேர்ந்த சஞ்சய் பிரதான் மற்றும் அவரது மகன் சத்யம் பிரதான் ஆகியோர் விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களது செல்போன் எண்களை கண்டுபிடித்து தொடர்பு கொண்டுள்ளார். அபோது இருவரும் மிகக்குறைந்த விலையில் மொத்தமாக ஐபோன்களை வாங்கி தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், அதற்கான பணத்தை தங்களது வங்கி கணக்கில் போடும்படி தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய ஜெகதீஷ், அவர்களது வங்கி கணக்கில் ரூ.61 லட்சத்தை டெபாசிட் செய்தார். பணத்தை பெற்ற இருவரும் ஐபோன்களை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த ஜெகதீஷ், அவர்களிடம் நச்சரிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவரும், முறையான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஜெகதீஷ் அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜெகதீஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜெகதீஷிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசார், மும்பையில் தலைமறைவாக இருந்த சஞ்சய் பிரதான், அவரது மகன் சத்யம் பிரதான் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.