ஒரு தலை காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜூவாக்காவில் உள்ள சுந்தரய்யா காலனியை சேர்ந்தவர் வரலட்சுமி (19) 12ம் வகுப்பு படித்து வந்தார். சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அகில் (22) என்பவர், வரலட்சுமியை காதலிப்பதாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், காதலை ஏற்க வரலட்சுமி மறுத்துள்ளார். 

இந்நிலையில், வரலட்சுமியின் உறவினருக்கு அதே பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில், பங்கேற்க வரலட்சுமியும். பெற்றோரும் சென்றனர். அங்கு வந்த அகில், தனியாக இருந்த வரலட்சுமியிடம் தனது காதலை ஏற்கும்படி கெஞ்சியுள்ளார். வரலட்சுமி அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதனிடையே, தனது நண்பர் ராமுவுடன் வரலட்சுமி பேசியிருந்ததால் மேலும் ஆத்திமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வரலட்சுமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  வரலட்சுமியை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வரலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்  அகிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வரலட்சுமி கொலைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வரலட்சுமி குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.