திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் கடத்தப்பட்டார். பின்னர் போலீசுக்கு பயந்து நடுவழியில் இறக்கி விட்டு தப்பிச் சென்ற 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் என்ஜினீயரிங் படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தாமோதரன் ஒருதலையாக காதலித்துள்ளார். இதுபற்றி அவரது தெரிவித்தபோது அவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். அவருக்கும் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம்  திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இதுபற்றிய விவரம் தாமோதரனுக்கு தெரியவர, அதிர்ச்சி அடைந்த அவர்  தான் காதலித்த அந்த பெண்ணை கடத்திச் செல்வது என பிளான் போட்டுள்ளார்.

இதற்காக தனது நண்பர்களின் உதவியோடு, நேற்று முன்தினம் நண்பர்கள் 4 பேரை காரில் அழைத்துக் கொண்டு அந்த பெண் வீடு இருக்கும் பகுதிக்கு தாமோதரன் சென்றார். அங்கு வீட்டுக்கு அருகில் உள்ள குழாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சென்று உன்னிடம் பேசவேண்டும், என்னோடு வா என்று சொல்லி அழைத்துள்ளார்.

அவர் வர மறுக்கவே தாமோதரனும், அவருடைய நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி அவரை கடத்திச் சென்றனர்.அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர் ஆனால் அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திக்கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கார் பற்றிய விவரங்களை அருகில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு தெரிவித்து மடக்கிப்பிடிக்க உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் உஷார் ஆன நிலையில் அந்த பெண்ணுடன் அவர்கள் காரில் புதுச்சேரிக்கு வந்தனர். போலீசார் தங்களை தேடும் விவரம் அறிந்து பயந்து போன அவர்கள் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே அந்த பெண்ணை காரில் இருந்து இறக்கி விட்டனர். கடத்தி வந்த காரையும் அந்த இடத்திலேயே விட்டு விட்டு தாமோதரனும் மற்றும் கூட்டாளிகள் எஸ்கேப் ஆனார்கள்.

அதன்பின் அங்கிருந்து அந்த பெண் வீட்டுக்கு வந்து தனது தந்தையிடமும், உறவினர்களிடமும் நடந்த விவரத்தை சொல்லி அழுதுள்ளார். அவரது தகவலின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்று  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த காரை கைப்பற்றினார்கள். தனது மகள் கடத்தப்பட்டது குறித்து அந்த பெண்ணின் தந்தை கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.