திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் தென்னூர், பூமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவரது மகள் மலர்விழி மீரா (20) திருச்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ரயில்வே தண்டவாளத்தை கடந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த முரளி கத்தியால் மீராவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து மீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த அப்பகுதியினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், அந்த நபரை கைது செய்தனர்.  

இதையடுத்து பிடிபட்டவரிடம் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `அய்யப்பன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முரளி (34). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் முரளி, அடிக்கடி திருச்சி வந்து சென்றுள்ளார். அப்போது மீராவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக பாலமுரளி தன்னை காதலிக்குமாறு மீராவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்விழி மீராவோ மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய ஆசைக்கு பலவந்தபடுத்த முயற்சி செய்திருக்கிறார். மீரா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே இதில் காமவெறியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பாலமுரளி அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.