பெற்றோர்களில் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்துகொண்ட காதல் ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியிலுள்ள  குளத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த திருமேனி மகன் சோலைராஜ்  வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்கு விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்கள் வெவ்வேறு  ஜாதி என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட இவர்கள், பெரியார்நகரில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் - மனைவி இருவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சரியாக அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று  அரிவாள்களுடன் அங்கு வந்து சில நொடி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், பலத்த வெட்டுக்காய மடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு, சூரங்குடி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  காதல் திருமணம் செய்த இந்த ஜோடி வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலை செய்த மர்ம கும்பல் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காதல் திருமணம் செய்த புதுமண ஜோடியை மர்ம கும்பல் தூக்கத்தில் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியை அதிரவைத்துள்ளது.