செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ஆகி விட்டு திருப்போரூர் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 5 பேரை பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இச்சம்பவம் பழிக்குப் பழிவாங்க நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30), வீரராகவன் (33), பிரசாந்த் (23), சுமன் (24), மணி என்கின்ற மணி கண்டன் (23) ஆகிய 5 பேரும் கடந்த 2011ல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கிலும், 2016ம் ஆண்டு தீபாவளி அன்று கலியா என்பவனை வெட்டி கொலை செய்த வழக்கிலும், கண்ணகி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் வெளியே வந்த இவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு கொலை வழக்குகளின் விசாரணைகளிலும் ஆஜராகி வந்தனர். நேற்று மாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜராகிவிட்டு திருப்போரூர் வழியாக சென்னை கண்ணகி நகரை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கொட்டமேடு என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே 2 பைக்குகளில் வந்த 5 பேர் ஆட்டோவை திடீர் என வழிமறித்து ஆட்டோவில் இருந்த 5 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதையடுத்து, ஆட்டோவை நிறுத்தி விட்டு மணி மற்றும் சுமன் ஆகிய இருவரும் தப்பி ஓடினர். சீனிவாசன், வீரராகவன், பிரசாந்த் ஆகிய 3 பேரும் சிக்கிக்கொண்டதால் அவர்களுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு கொட்டுமேடு சந்திப்பில் கடைகளில் இருந்த பொதுமக்கள் கையில் கிடைத்த கட்டை, கல் ஆகியவற்றால் வெட்டுவதை தடுக்க முயன்றனர். ஆனால் திடீர் என கூட்டம் கூடுவதை பார்த்த பைக்கில் வந்த 5 பேர் கும்பல் பொதுமக்களை நோக்கி அரிவாளை காட்டி, ''அருகில் வந்தால் வெட்டுவோம்'' என மிரட்டி சாலையில் அரிவாளை தேய்த்துக் கொண்டு நெருப்பு பொறி பறக்க தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும், திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிருக்குப் போராடிக்கொண்டிந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் தகவல் அறிந்த சென்னை கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார், எஸ்ஐ பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

வந்தவர்கள் யார், பழிக்குப் பழி வாங்க வெட்டினார்களா என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.