மதுரையைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர், தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமியை விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பதற்கு உறவினர்கள் முடிவு செய்தனர். விடுதியில் சேர்ப்பதற்கு முன்பாக காப்பக சட்டதிட்டங்கள் படி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது.

அப்போது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் தீவிரமாக உறவினர்கள் விசாரித்த போது தான், வீட்டின் அருகே இருக்கும் 60 வயது முதியவர் ஒருவர் பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்திருக்கிறது. 

தினமும் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் முதியவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார். பின்னர் அவரை மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதியவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.