மதுரையைச் சேர்ந்தவர் லோகநாயகி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த மாதம் 15-ந்தேதி மதுரை அரசு மருத்துவமனையில்  பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பெற்றோரிடம் காண்பிக்க அங்கு நர்சாக பணிபுரிந்த கார்த்திகா  ரூ.1000 லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவமனை  நிர்வாகத்தில் லோகநாயகியின் உறவினர்கள் புகார் செய்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள் கார்த்திகாவை அரசு மருத்துவமனையில்  இருந்து அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர். இதனால் கார்த்திகா மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் கார்த்திகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட கார்த்திகா குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

எனவே அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது லஞ்ச புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.