அந்த வீடியோவில் சில விநாடிகள் ஆங்கிலத்தில் பேசும் நித்தியானந்தா பின்னர், ‘’தமிழ்ல வாயத்திறந்தாலே ஏதாவது தகராறு பண்றானுங்க. எதையாவது நான் சொல்லி வைச்சிடுறேன். இவனுங்களுக்கு தமிழும் புரிய மாட்டேங்குது. புரியலைனா சும்மாவும் இருக்க மாட்டேங்கிறாய்ங்க. மூல லிங்கத்துக்கும் மூலவர் லிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிய மாட்டேங்குது. எதையாவது நான் சொல்ல அவனுங்க எதையாவது கேஸை பைல் பண்ணி வைக்கிறாய்ங்க.  இதுக்கு முன் ஜாமின் வாங்கிறதுக்கே ஓடறதுக்கு நேரம் சரியா இருக்கு. அதனால தான்யா தமிழ்ல சத்ஸங்கம் செய்யாம சும்மா இருக்கேன். 

இருங்கைய்யா சீக்கிரம் வந்துடுறேன். இன்னொன்னு தமிழ்நாட்டுல எவனுக்காவது எந்த பிரச்னையா இருந்தாலும் சரி அட்டென்சனை திருப்புறதுக்கு நித்தியானந்த ஒருத்தனைத் தான் தேடுறாய்ங்க.’’என அந்த வீடியோவில் பரிதாபமாக பேசியுள்ளார்.  

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜனார்த்தனசர்மா என்பவர் அகமதாபாத் போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்தார். தனது 3 மகள்களை பெங்களூருவில் உள்ள நித்யானந்தா கல்வி நிலையத்தில் சேர்த்து இருந்ததாகவும் அவர்களை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி வந்து சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஜனார்த்தன சர்மாவின் கடைசி மகளை மீட்டனர். மற்ற 2 மகள்களான லோபமுத்ரா , நந்திதா  ஆகியோரை மீட்கவில்லை. அவர்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நித்யானந்தா மீது குழந்தை கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் தலைமறைவாக உள்ள நிலையில் நித்யானந்த இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.