மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. 
 
வழக்கில் தொடர்புடையவர்கள் கடந்த 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.  இதனைத் தொடர்ந்து நிர்மலாதேவிக்கான ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் நீதிபதி பரிமளா, நிர்மலா தேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.