வேலை தேடி பூங்காவிற்கு சென்ற  இளம் பெண்ணை அங்கு வந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு இரவு நேரத்தில் வேலை விஷயமாக  நண்பர்  ஒருவரை பார்க்க சென்றார்.  பார்க்க சென்ற நபரே அந்தப் பெண்ணை புதருக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக தெரிகிறது. 

இதனை அடுத்து ,  அப்பெண் சத்தம் போடவே  அந்த இடத்திற்கு வந்த இருவர் அப்பெண்ணை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.  பிறகு காப்பாற்றிய அந்த இரண்டு நபர்களும்  தனது நண்பர்களுடன் இணைந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து நொய்டா போலீசார்  கூறுகையில் இந்தப் பெண் வேலைவாய்ப்புக்காக,  கடந்த புதன்கிழமை இரவு,  ரவி என்பவரை பூங்கா ஒன்றில் சந்திக்க சென்றுள்ளார்.  அப்போது ரவி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளார்.  அந்தப் பெண் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த இருவர் ரவியிடம் இருந்து  பெண்ணை மீட்டனர்.  தொடர்ந்து அந்த நபர்கள் இருவரும் மேலும் மூன்று நண்பர்களை அழைத்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

பின்னர் தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து,  பலத்த காயமடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம் என்றனர். பெண்ணை பூங்காவிற்கு வரவழைத்த ரவியை கைது செய்ததுடன், ரவி கொடுத்த தகவலின்படி,   அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிரிட்ஜ் கிஷோர்,  பிரீதம்,  உமேஷ் ஆகிய மூவரை கைது செய்துள்ளோம்.   மேலும் இதில் தொடர்புடைய குட்டு மற்றும் ஷம்பு ஆகிய இருவரையும் தேடி வருகிறோம்.  மேலும் விசாரித்ததில் இவர்கள்  அனைவரும் பூங்கா அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  படுகாயம் அடைந்த பெண் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் அப்பெண் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.