கேரளாவில் ஆழப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு தீ வைப்பு; வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்?
கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்து எரித்துக் கொன்ற வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட இருக்கிறது.
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்த ஷாருக் சைஃபி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது தீவிரவாத தாக்குதலுக்கான வலுவான ஆதாரங்கள் புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது.
ரயில் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் சைஃபி ஒரு தீவிரவாதி என்று கேரள கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) எம். ஆர். அஜித் குமார் திங்கள்கிழமை தெரிவித்து இருந்தார். இந்தக் குற்றத்தை செய்தவர் சைஃபி என்றும், சர்ச்சைக்குரிய வீடியோக்களை ஷாருக் சைஃபி பார்த்ததாகவும் ஏடிஜிபி தெரிவித்து இருந்தார்.
ஷாருக் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்கள் ஜாகிர் நெயில், இஸ்ரார் அகமது ஆகியோரது வீடியோக்களை கேட்டு வந்துள்ளார். மேலும் கேரளாவில் வன்முறையில் ஈடுபடும் நோக்கத்தில் வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர், 27 வயதுடையவர் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறந்த வெளிப் பள்ளியில் படித்தவர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவி கிடைத்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று மேலும் தெரிவித்து இருந்தார்.
கோழிக்கோடு - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு; ஒருவர் கைது!!
ஐபிசி 307 (கொலை முயற்சி), ஐபிசி 326 ஏ, ஐபிசி 436 மற்றும் இந்திய ரயில்வே சொத்து (சட்டவிரோத உடைமை) சட்டப் பிரிவு 151 ஆகியவற்றின் கீழ் ஷாருக் சைஃபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே ஷாருக் சைஃபி மீது ஐபிசி 302 (கொலை) வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்து இருந்தனர்.
ஷாருக்கிற்கு டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள தொடர்புகளின் மூலம் தீவிரமான அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று என்ஐஏ அதன் முதல் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் முன் கூட்டியே சதி திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி இரவு ஆழப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு அருகே எலத்தூர் வந்து கொண்டிருக்கும்போது பயணிகள் மீது ஷாருக் சைஃபி நெருப்பு வைத்தார். இதில் மூவர் உயிரிழந்தனர். ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சம்பவம் நடத்த நான்கு நாட்களில் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் இருந்து ஷாருக் சைஃபியை போலீசார் கைது செய்து, கேரளா கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் உபியில் கைது.. தீவிரவாத செயலா? பரபர பின்னணி