சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் வசித்து வந்தவர் யுவராஜ். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பர்களுடன் யுவராஜ் புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.  

அதேபோல பக்கத்து தெரு இளைஞர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு குழுக்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் வெளியே சென்ற போது மர்ம கும்பல் வழி மறித்துள்ளது. இவர்களிடம் யுவராஜ் தப்பிக்க முயற்சித்த போது ஓட ஓட விரட்டி வெறித்தனமாக தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடூரமாக வெட்டி அவரின் சடலத்தை கணபதிபுரம் ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளனர். 

உடனே இது தொடர்பாக அவரது நண்பர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யுவராஜுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதலால் கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் யுவராஜ் ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.