கல்யாணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபியை அடுத்த அளுக்குளி , மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நித்திய பிரியா. சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகிறது. கணவன் - மனைவி இருவரும் மகாலட்சுமி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சீனிவாசன் வேலை வி‌ஷயமாக வெளியே சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பி வந்தார். வீட்டின் கதவை தட்டினார். வெகு நேரம் ஆகியும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் நித்திய பிரியா தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது சீனிவாசன் அலறித்துடித்ததை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்தியபிரியா தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். 

இதுகுறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நித்திய பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நித்திய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என இன்னும் சரியாக தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமனும், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.