நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தலையை துண்டித்து உடலை தண்டவாளத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவியின் அண்ணன் மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி மாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய்(45). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் நம்பிராஜன் (21), பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதிக்கும் (18) நம்பிராஜனுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் வான்மதியின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சொந்த ஊரில் இருந்தால் பிரச்சனை ஏற்படும் என்று கருதி நெல்லை டவுன் வயல் தெருவில் ஒரு வாடகை வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர், இவர்களுக்கு நம்பிராஜன் தந்தை அருணாச்சலம் பண உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வீட்டிற்கு அவரது நண்பர் முத்துப்பாண்டி சென்று, மது குடிக்க இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறைவான இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு புதரில் பதுங்கியிருந்த கும்பல், பாய்ந்து வந்து நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது. 

இதில் அவரது தலை துண்டானது. பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளனர். நம்பிராஜனின் உடலை ரயில்வே தண்டவாளத்துக்கு வீசி சென்றுவிட்டனர். இதனிடையே, நீண்ட நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் மருமகள் மாமனார் அருணாச்சலத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை தேடி வந்தனர்.


 
இந்நிலையில், ரயில்வே தண்டவாளம் அருகே கேட்பாரற்று இருசகக்ர வாகனம் நின்றதால் அப்பகுதியில் தேடியபோது நம்பிராஜன் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது. கொலையை மறைக்க உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.