கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது வாத்திக்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடன் பயின்ற ஒரு மாணவனுடன் ரேகா நெருங்கி பழகியிருக்கிறார். முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் காதலர்களாக மாறியிருக்கிறார்கள்.

பல்வேறு இடங்களுக்கு அந்த மாணவனுடன் ரேகா சுற்றி வந்த நிலையில், தனிமையில் இருவரும் எல்லை மீறி இருக்கிறார்கள். பலமுறை இவ்வாறு நடக்கவே மாணவி ரேகா கர்ப்பம் தரித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது உறவினர் ஒருவருக்கு ரேகா குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார், அதில், தனக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்திருப்பதாகவும், சடலத்தை தனது புத்தகப்பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிவதாகவும் கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே மாணவி ரேகாவின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு அவரது பையில் குழந்தையின் சடலம் இருந்தது. இதையடுத்து ரேகாவிடம் காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது கர்ப்பம் தரித்து 6 மாதமே ஆன நிலையில், குறைப்பிரசவதில் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது. பெற்றோருக்கு தெரியாமல் பார்த்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் குளியலறையில் வைத்து குழந்தை பெற்றிருக்கிறார்.

குழந்தையின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி புத்தக பையில் வைத்து சுற்றித்திரிந்த நிலையில் தான், என்ன செய்வது என்று தெரியாமல் உறவினருக்கு தகவல் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே ரேகாவின் காதலனுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. அதன்பிறகு மனஉளைச்சலில் அந்த இளைஞர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது குறித்து கொலைவழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவி ரேகாவை கைது செய்தனர். அவருக்கு இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.