நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன்). இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் வர்ஷினி என்ற மகளும், 3 மாதமே ஆன முத்து அசித் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

நம்பிராஜன் சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  அவரது மனைவி சங்கரி தனது 2 குழந்தைகளுடன் களக்காட்டில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று  சங்கரி தனது வீட்டில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் தனது 2 குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக போட்டு மூழ்கடித்தார்.

இதனால் 2 குழந்தைகளும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தன. நம்பிராஜன் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு தாய் சங்கரியை கைது செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து  2 குழந்தைகளையும் கொன்றது ஏன்? என்று தாய் சங்கரியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சங்கரி எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சங்கரி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் 2 குழந்தைகளையும் கொன்றி ருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் 2 குழந்தைகளையும் சங்கரி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.