நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேஸ்வரியின் கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேஸ்வரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேஸ்வரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, போலீசார் தரப்பில் கூறுகையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலையில் சம்பந்தப்பட்டது கொலையுண்ட மேயர் குடும்பத்திற்கு தெரிந்த நபர்களாகவே அவர்கள் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அந்த சம்பவத்தில் கிடைத்த தடயங்களில் அங்கு வந்த நபர்களை உட்கார வைத்து பேசியிருக்கின்றார் உமா மகேஸ்வரி. வந்த நபர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னரே கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். அது போக அந்தக் கொலையில் பெண்கள் 3 உட்பட ஆண்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் ஒருவரிடம் சங்கரன்கோவில் தொகுதியில் சீட் பெற்று தருவதாகவும் உமா மகேஸ்வரி வாக்குறுதி தந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினரை வைத்து அவரை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த திமுக மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சீனியம்மாளிடம் 
தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.