நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் உட்பட 3 பேர் ஜூலை மாதம் 23-ம் தேதி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த 3 கொலைகள் தொடர்பாக தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (39) என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இவர் ஒரு சைக்கோ கொலைகாரனை போல போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தான். கொலையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு 3 பேரையும் நான் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்தேன் என்றும் கூறி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், 3 பேர் கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் மேயர் வீட்டுக்கு புகுந்த கும்பல், பயன்படுத்திய கார் சன்னாசி உடையது என்பது தெரியவந்துள்ளது.