இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், உமா மகேஸ்வரி, முருகசங்கரன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் மாரியும் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் 5 நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை. பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த கொலையில் பழைய குற்றவாளிகள் யாரும் இந்த கொலை-கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற புதிய கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை  நடத்தினர்.

அதில் குறிப்பாக தென்காசி பகுதியை சேர்ந்த ஒருவர் இதேபோன்ற கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 பேர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாளில் சிறையில் இருந்து பரோலில் வெளியே சென்றிருந்த அவர் அதன்பிறகு சிறைக்கு திரும்பி வரவில்லை. எனவே அவருக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.


இதுதவிர சொத்துப்பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்று உமா மகேஸ்வரியின் உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், கொலை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக மதுரையைச் சேர்ந்த சீனியம்மாள் என்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சீனியம்மாளின் மகனைத் தான் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்திர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இநத் விஷயத்தை போலீசார் கெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.