நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி . தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதயைடுத்து அங்கு வந்த  தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். 3 பேரை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பலை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகள் உமா மகேசுவரியின் கழுத்தில் கிடந்த நகை, கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர். எனவே, இந்த கொலைகள் நகைக்காக நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கொலையாளிகள் யார்? எப்படி உள்ளே வந்தனர்? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். உமா மகேசுவரியின் அண்ணன் மகன் பிரபு மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

உமா மகேசுவரியின் வீட்டின் அருகில் ஒரு புரோட்டா கடை உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் நடைபெறுகின்ற கட்டிட வேலையில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி கட்டிட பணியில் ஈடுபடக்கூடிய வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கடைக்கு சாப்பிட வந்து சென்றுள்ளனர்.

அப்படி சாப்பிட வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல், உமா மகேசுவரி வீட்டில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததையும், காவலுக்கு காவலாளி மற்றும் பாதுகாப்புக்கு நாய் கூட இல்லாததையும் பார்த்து விட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

இதற்காக அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சில நாட்களாக பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகப்படும்படியாக வந்த சில வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும், நெல்லை மாநகர பகுதியில் தங்கி இருந்து கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்ற 20 வடமாநில இளைஞர்களை தனிப்படை போலீசார் பிடித்து சென்று அவர்களுடைய கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.