திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,  அவரது கணவர்  மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து  கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலை வழக்கில் மதுரை திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த குடும்பத்திற்குள் கொடுக்கல் – வாங்கல் தகராறு இருந்து வந்ததால் அவர்கள் மூவரையும் கொலை செய்ததான கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை கூடல் புதூர்  வீட்டில் இருந்த சீனியம்மாள் மற்றும் அவருடைய மகள் நேற்று திடீரென மாயமாகினர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சீனியம்மாளின் கணவர் சன்னாசியிடம் போனில் கேட்ட போது, “சீனியம்மாளுக்கு திடீரென மதிய நேரத்தில் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சர்க்கரை நோயும் உள்ளதால் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். 

நான் வெளியூரில் இருப்பதால் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னையும், தனது குடும்பத்தினரிடமும் விசாரிக்க வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்த காரணத்தினால் விசாரணைக்கு பயந்து சீனியம்மாள், குடும்பத்துடன் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக சீனியம்மாள் ஆஸ்பத்திரியில் சேர்ந்தாரா? அல்லது தலைமறைவாகி விட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.