நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திடீர் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் ஜூலை 23-ம் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை வருகின்றனர். ஆனால், 5 நாட்கள் ஆகியும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை. பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்நிலையில், 3 பேர் கொலை தொடர்பாக, திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தியதாக கார்  ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

சீனியம்மாள் மற்றும் உமா மகேஸ்வரி இடையே ஏற்கெனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசியல் ரீதியான பிரச்சனையில் இந்தக் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். குற்றவாளிகள் யார் என்பது இன்று அல்லது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.