நடிகை ஒருவரை வாட்ஸ் அப் மூலம் ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபர் ஒருவரை அந்த நடிகை உலகிற்கே அடையாளம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்ஸேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் , கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்தவர். இவரது மேனேஜரின் வாட்ஸ் அப்பில் துபாயைச் சேர்ந்த ஒருவர், 'நேகா சக்ஸேனா தன்னுடன் ஒருநாள் துபாயில் தங்குவாரா' என்கிற ரீதியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தத் தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள நேகா சக்ஸேனா, “அரபு நாட்டில் வசிக்கும் நண்பர்களே.. இவரைப் போன்றவர்களால் நல்ல ஆண்களுக்கும் கெட்ட பேர் உருவாகிறது. இவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.. இவரது சுயரூபத்தை குடும்பத்தினரிடம் அம்பலப்படுத்த வேண்டும். இவரை கண்டு பிடிக்க முடிந்தால் எனக்கு தகவல் கொடுங்கள்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சினிமா பிரபலமாக இருந்துகொண்டு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு நான் எப்படி முன்மாதிரியாக இருக்க முடியும் என்று கூறியுள்ள நேஹா, சமூகத்தில் உள்ள இதுபோன்ற நபர்களை அடையாளப்படுத்தினால்தான் இன்னொரு நிர்பயா பாதிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளார்.

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரைக் கண்டு அஞ்சாமல் அந்த நபரை உலகிற்கு ஒரே நிமிடத்தில் அம்பலப்படுத்திய நேஹாவுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அதே நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது வழக்கமாகக் கூறும் ‘என்னுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டது’ என்பதையே எல்சனும் கூறியுள்ளார்.