நாமக்கல் அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த இளம் தம்பதியை வீடு புகுந்து மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி விமல்ராஜ். சேந்தமங்கலத்தை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த அனிதாவும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து எதிர்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ள நிலையில் அனிதாவின் தாய், தந்தையுடன் வசித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்றிரவு திடீரென வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அனிதாவின் தந்தை கருப்பசாமி, பதறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்தார். ஆவேசத்தில் இருந்த கொலையாளிகள், கருப்பசாமியையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அனிதாவின் தாய் கலாவதி, மகள் மற்றும் மருமகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டும், 5 மாத குழந்தை அழுது கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர் கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அனிதாவின் அண்ணன் அருணுக்கும் அவரது நண்பர் நிக்கல்சனின் மனைவி ஷோபனாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. 

அப்போது, `என் மனைவியிடம் பேசாதே?' என்று நிக்கல்சன் அருணை பலமுறை கண்டித்துள்ளார். இதை அவர் கேட்கவில்லை. இதனிடையே, ஷோபனாவை அருண் அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிக்கல்சன் அருண் வீட்டுக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.