கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சௌராஷ்டிர தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சோனியா என்ற மகள் உள்ளார்.  இவர்கள் மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒத்திக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

ஒத்தி பணமாக ஜான் கென்னடி ராம் மோகனிடம்  90 ஆயிரம் ரூபாய்  கொடுத்துள்ளார். , ஒத்தி காலக்கெடு முடிந்தும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் வாடகையை மட்டும் ராம் மோகன் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே வீடு பழுதடைந்ததால் தாங்கள் வீடு மாற உள்ளதாகவும், ஒத்தி பணத்தை தர வேண்டும் என்றும் ராம் மோகனிடம், ஜான் கென்னடி கேட்டுள்ளார். வீடு பழுது நீக்கு செலவிற்கே தாங்கள் கொடுத்த பணம் காணாது என கூறி ஒத்தி பணத்தை கொடுக்காமல் ராம் மோகன் மோசடி செய்துள்ளார்.

மேலும் , ஜான் கென்னடி குடும்பத்துடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துவிட்டு  ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராம் மோகன் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பணத்தை மோசடி செய்ததோடு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தங்களை மிரட்டும் ராம்மோகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி  ஜான் கென்னடியின் மனைவி ராணி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர் சரவணன் ஓடிப்போய் ராணியின் கையில் இருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பறித்து கீழே எறிந்து காப்பாற்றினார். இதையடுத்து போலீசார் ராணியை கைது செய்தனர்.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய செய்தியாளர் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.