காதலனுடன் வசித்த பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக போலீசார் பல்வேறு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியை சேர்ந்த சேப்பன் மகன் செல்வக்குமார் இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் சகுந்தலா என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால், அதிகம் எதிர்ப்பு எழுந்தது இதனையடுத்து செல்வகுமார் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு சாட்டியகுடிக்கு வந்து ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

சகுந்தலா தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சகுந்தலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

வீடு வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்ததால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததில் அந்த பெண் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த அவர்கள்,உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த வலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலா உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுந்தலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.