காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்ததை யடுத்து அவரது கணவனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியின் மர்ம சாவு, ஒரத்தநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாளவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் இந்துமதி. இவர் தஞ்சை ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்துமதிக்கும் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த  சதீஷ்குமார் என்ற வாலிபருக்கும்  முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியது.

காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு ஜாதியை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஒரத்தநாட்டில் தனியாக வீடு வாடகை எடுத்து கணவன்- மனைவி போல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே இந்துமதி, வழக்கம் போல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். சதீஷ்குமார், எலக்ட்ரீசியன் வேலைக் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சதீஷ் குமாருக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர் கடந்த சில நாட்களாக தினமும் அளவுக்கு அதிகமாக சரக்கு அடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி இந்துமதி கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே, மனம் நொந்துபோன இந்துமதி நேற்று இரவு வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த விஷயம் தெரிந்த அறிந்த அக்கம் பக்கத்தினர் ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் இந்துமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

மேலும், இந்துமதியின் மர்ம சாவு பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு வர உள்ளனர்.