கல்யாணமான வெறும்  30 நாட்களில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற நர்சு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை கணேஷ் நகரில் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த அஜிதா என்பவர் தங்கியிருந்தார். வழக்கமாக காலையில் பணிக்கு செல்லும் இவர் இரவுதான் வீடு திரும்புவார். நேற்று வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகாமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நர்சு அஜிதா படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகிலேயே தூக்க மாத்திரைகள் மற்றும் வி‌ஷ பாட்டில் கிடந்தது. மேலும் வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட போடப்பட்டிருந்த நிலையில்  சேலை  தொங்கிக் கொண்டிருந்தது.

இதனால் போலீசார் அஜிதாவின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அஜிதா மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடிவு செய்து, பிறகு மனம் மாறி மாத்திரைகள் சாப்பிட்டிருக்கலாம் என்றும், பின்னர் வி‌ஷத்தையும் குடித்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நர்சு அஜிதா ஏன் இப்படி ஒரு சாவு முடிவை எடுத்தார்? என போலீசார் விசாரித்த போது சோகமான அதன் பின்னணி கதை வெளியே வந்தது. அஜிதாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்குளம் அருகில் உள்ள கருங்கல் என்ற குக்கிராமம் ஆகும். நர்சிங் படிப்பு முடித்த அஜிதா சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த ஊழியர் ஜான்பிரின்ஸ், அஜிதாவின் அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினான். அஜிதாவும் ஜான்பிரின்சை உயிருக்கு உயிராகாக காதலித்தார். ஆனால் இவர்களின் காதலை தெரிந்து எதிர்ப்பு தெரிவித்த அஜிதாவின் பெற்றோர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

அதன்படி குமரி மாவட்டம் கல்லுவிளை கிராமத்தை சேர்ந்த ஜெகன் பாபு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். சிங்கப்பூரில் வேலை பார்த்த ஜெகன்பாபு கல்யாணம் செய்துகொள்ள ஊருக்கு வந்திருந்தார். திருமணம் முடிந்து கல்லுவிளையில் புது மனைவி அஜிதாவுடன் தங்கியிருந்தார்.

நர்ஸ் அஜிதா கல்யாண லீவு முடிந்து மீண்டும் சென்னைக்கு வேலைக்கு சென்றார். மருத்துவமனையில் தனது முன்னாள் காதலனை பார்த்த அஜிதா, தனக்கு கணவர் ஜெகன்பாபுவுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்று கூறி அழுதுள்ளார். இதனால் கணவன் ஜெகன்பாபுவை தீர்த்து காலி செய்ய முடிவு செய்தனர்.

2016 ஜூலை 7-ந்தேதி கணவர் ஜெகன்பாபுவை சென்னையில் நண்பர்கள் கல்யாண பார்ட்டி வைக்கிறார்கள் என கூறி நர்ஸ் அஜிதா வரவழைத்தார். உடனே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெகன்பாபு ஊரில் இருந்து புறப்பட்டு வந்தார். அப்போது அதே ரெயிலில் வந்த அஜிதாவின் காதலன் ஜான்பிரின்ஸ், தன்னை நர்ஸ் அஜிதா வேலைபார்க்கும் மருத்துவமனைக்கு டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ரெயில் திருச்சி வந்ததும் சென்னைக்கு காரில் செல்லலாம் என கூறி ஜெகன் பாபுவை திருச்சி முடுக்குபட்டி ரெயில் தண்டவாளம் அருகில் ஈரத்துணியால் ஜெகன் பாபுவின் கழுத்தை இறுக்கி கொன்று உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு தப்பிவிட்டார். ரெயில் ஏறினால் ஜெகன்பாபு தற்கொலை செய்தது போல ஆகிவிடும் என நினைத்து அப்படி செய்துள்ளார்.

ஆனால் திருச்சி ஜங்சன் அருகில் என்பதால் ரெயில்கள் இந்த பகுதியில் மெதுவாக செல்லும். அப்போது அந்த நேரத்தில் வந்த அனந்தபுரி ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் உடல் கிடந்ததை பார்த்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்க, அஜிதாவும், காதலன் ஜான்பிரின்சும் செய்த குட்டு அம்பலமாகி கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீனில் விடுதலையாகினர். தற்போது இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஆஜராக வேண்டும் என்பதால் அஜிதா திருச்சி மேலகல்கொண்டார் கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிக் கொண்டே திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொலை நடந்த 3 வருடம் கழித்து நர்ஸ் அஜிதா மர்மமான முறையில் திருச்சி வீட்டிற்குள் பிணமாக கிடந்துள்ளார்.

அவர் தற்கொலை முடிவில் இறந்தாரா? அல்லது சாவிற்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணமான 30 நாட்களில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொடூரமாக கொன்றுள்ளார் அஜிதா, இந்த சம்பவம் நடந்து 3 வருடம் முடிந்த நிலையில் மர்மமான முறையில் இந்த நர்ஸ் தற்போது இறந்துள்ளார்.