நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக, சுப்பையம்பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவரது மனைவி ராஜாமணி, அதிமுக பிரமுகர் செந்தில்குமாரின் மனைவி சத்யா ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த முறை இருக்கூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்த ஆறுமுகம், இம்முறை தனது மனைவியை அப்பதவிக்கு கொண்டு வர  விரும்பினார். அதற்காக செந்தில்குமாரிடம் ஆதரவு தரும்படி அவர் உதவி கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அவர்களுக்குள்  முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செந்தில்குமாரை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுத்த ஆறுமுகம், தனக்கு நெருங்கிய  உறவினரான துப்புரவு பணியாளர் சரவணனுடன் திட்டம் தீட்டியுள்ளார். பின்னர் கடந்த 30ஆம் தேதி செந்தில்குமாரையும் அவரது நண்பர் தியாகராஜனையும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.

அதன்படி தியாகராஜனுடன் சென்ற செந்தில்குமார் மது அருந்தி இருக்கிறார். அப்பொழுது ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த விஷம்  கலந்த குளிர்பானத்தை, அவர்கள் இருவருக்கும் மதுவில் கலந்து கொடுத்துவிட்டு, ஆறுமுகமும் சரவணனும் மதுவில் தண்ணீரை ஊற்றிக் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கேறிதும் நான்கு பேரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அதன் பின் செந்தில்குமாருக்கும், தியாகராஜனுக்கும் கடுமையான வயிற்று எரிச்சல், தலை சுற்றுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை முயற்சி என வழக்குப் பதிவு செய்து துப்புரவு பணியாளர் சரவணனை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்து வந்த ஆறுமுகம் தேடப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் புதன்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டது.