காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் காஞ்சிபுரத்தில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் செய்யாறு டவுன் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பெண் பார்த்து வந்தனர். சதீஷ்குமார் மட்டும் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார். இன்று காலை அவரது பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தார்.

சுந்தரி சினிமா தியேட்டர் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார். அப்போது காரில் வந்த 10 பேர் கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சதீஷ்குமாரை நோக்கி ஓடிவந்தனர்.

இதனை கண்டு திடுக்கிட்ட சதீஷ்குமார் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். 10 பேர் கும்பலும் அவரை விரட்டியது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.

சதீஷ்குமார் ஓடும் பஸ்ஸில் ஏறினார். அவரை துரத்தி வந்த கும்பல் வேகமாக பஸ்ஸில் ஏறினர். பஸ்சுக்குள் சதீஷ்குமாரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதனைக் கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். பஸ் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. சதீஷ்குமாரைவெட்டி சாய்த்த கும்பல் வேகமாக இறங்கி காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்த போலீசார் சதீஷ்குமாரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
முன்விரோத தகராறில் சதீஷ்குமார் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.