கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி. இவர்களது மகள் திலகவதி விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுந்தரமூர்த்தி நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டதால், திலகவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் மாலையில் இவரது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஒரு இளைஞர்  திலகவதியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர், தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி அதேபகுதியை சேர்ந்த அவரது மாமா மகேந்திரன் என்பவருக்கு போன் செய்து தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அவர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

திலகவதியை அவரது ஆண் நண்பர் ஆகாஷ் என்பவர் குத்திக் கொன்றது விசாரணையில் தெரியவந்ததது. ஆகாஷ் திலகவதியை ஒரு தலையாக காதலித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ஒளிந்திருந்த ஆகாசை கைது செய்தனர்.

சுந்தரமூர்த்தியின் முதல் மகள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். திலகவதி மட்டும் இவர்களுடன் இருந்து வந்தார். தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.