முன்விரோதம் காரணமாக சிவகங்கைச் சேர்ந்த ராஜசேகர் என்ற ரவுடியை மர்ம கும்பல் மிகக் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துள்ளது.  கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்.  இவர் தற்சமயம் காளையார்கோவிலில் வசித்து வருகிறார். இன்று இவர் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிந்தார். அப்போது அவர் ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் வந்து கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜசேகரை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. பதட்டம் அடைந்த அவர் தனது இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஒடினார்.

ஆனால் அவரை விடாமல் விரட்டிய அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தி இரும்ப கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளதில் சரிந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை கண்ட அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியது.  தகவலறிந்த சிவகங்கை காவல்துறையினர் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையான ராஜசேகரன் மீது ஏற்கனவே 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முன்விரோத த்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜசேகரை வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.