மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து ஒருவரை பயங்கர ஆயுதங்களால் கொல்ல முயன்ற கும்பலை தடுக்க காவலாளி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் கடந்த மே மாதம் நடை பயிற்சியின் போது ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கமணி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கமணி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில், தங்கமணி இன்று காலை மானாமதுரை கனரா வங்கிக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அமமுக பிரமுகர் சரவணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க பயங்கர ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தது. அப்போது தங்கமணியை கொல்லும் முயற்சியில் ஈடுபட்ட போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவலாளி தனது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.