தலாப் சவுக் பகுதியில் வெடித்த வன்முறை குவாசிபுரா மற்றும் நகரின் பல்வேறு இதர பகுதிகளுக்கும் பரவியது. இதன் காரணமாக பல்வேறு வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. எஸ்.ஐ. சிதார்த் சவுத்ரி உள்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நாடு முழுக்க பல மாநிலங்களிலும் ராம நவமி தினத்தன்று கலவரங்கள் அரங்கேறின. இதுவரை ராம நவமி கலவரங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ராம நவமி தினத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ஷ்ரா தெரிவித்து இருக்கிறார். "வன்முறையின் போது எஸ்.ஐ. சித்தார்த் காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. இதுதவிர மேலும் ஆறு காவல் துறை அதிகாரிகள் வன்முறையில் பலத்த காயமுற்று இருக்கின்றனர். எனினும், காயமுற்றவர்கள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். போலீஸ் அதிகாரிகள் தவிர, சிவம் சுக்லா என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும், யாரும் அபாய கட்டத்தில் இல்லை," என அவர் தெரிவித்தார்.

வன்முறையில் முடிந்த வாக்குவாதம்:

வன்முறை தலாப் சவுக் மசூதி அருகே வெடித்து இருக்கிறது. ஓலிப் பெருக்கியில் பாட்டு இசைத்த விவகாரத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் வன்முறையாக மாறி இத்தனை சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை குறித்து வெளியாகி இருக்கும் வீடியோக்களின் படி மசூதி மற்றும் அருகில் உள்ள வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

வன்முறை தொடங்கும் போது பா.ஜ.க. தலைவர் கபில் மிஷ்ரா கார்கோன் பகுதியில் ராம நவமி யாத்திரையில் கலந்து கொள்ள அங்கு வந்திருந்தார். தலாப் சவுக் பகுதியில் வெடித்த வன்முறை குவாசிபுரா மற்றும் நகரின் பல்வேறு இதர பகுதிகளுக்கும் பரவியது. இதன் காரணமாக பல்வேறு வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டது. 

பல்வேறு பகுதிகளில் வன்முறை:

இதுமட்டும் இன்றி கார்கோனில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பார்வானி மாவட்டத்தின் சேத்வா பிளாக் பகுதியிலும் வன்முறை வெடித்தது. ராம நவமி தினத்தன்று மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பெரும் பதற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.