தெலங்கானாவில் தாய், மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். 

தெலங்கானாவில் தாய், மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் கமரெட்டி என்ற இடத்தில் கங்கம் சந்தோஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரும் இவரின் தாயார் பத்மாவும் கடந்த 16-ம் தேதி அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, சந்தோஷ் தங்களது தற்கொலைக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த 6 பேர், காவல் ஆய்வாளர் நாகார்ஜுனா ஆகியோர் தான் காரணம் என்று பேசி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், அவர்களின் தொடர் துன்புறுத்தல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாக உருக்கமாக பேசியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதோடுமட்டுமல்லாமல் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் வீடியோவில் குறிப்பிட்டுள்ள அந்த 7 பேரும் சேர்ந்து தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்யவிடாமல் தடுத்ததாக சொல்லியுள்ளார். இதனால் தான் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாக எழுதியுள்ள அவர், நாங்கள் செத்த பிறகாவது எங்களுக்கு நீதி கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இன்ஸ்பெக்டர் தனது போனை எடுத்துச் சென்றதாகவும் எனது போனில் இருந்து ரகசியத் தகவலைப் எடுத்த பிறகு இன்ஸ்பெக்டர் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்தாகவும் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் எனது போனிலிருந்த் எடுத்த தகவலை டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பியதாகவும் அவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொண்டு துன்புறுத்தல் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைதொடர்ந்து, அப்பகுதி காவல்துறையினர், தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த வீடியோவின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ராமயம்பேட்டை நகராட்சி கவுன்சில் தலைவர் ஜிதேந்தர் கவுட், ஐந்து டிஆர்எஸ் தலைவர்கள் மற்றும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நாகார்ஜுனா உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அதிரடியாக கைது செய்தனர்.

தற்போது கைதான 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இருவர் தற்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சந்தோஷுக்கு எந்த மாதிரியான இன்னல்களை கொடுத்தனர் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.