குழந்தைகளின் கண்முன்னே தாய் மற்றும் அவரது நண்பரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வனிதா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த வனிதா, கனகராஜ் என்ற நபருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்பத் தேவைக்காக தனது உறவினரான பிரகாஷ் என்பவரிடம் ஓராண்டுக்கு முன் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 50 ஆயிரத்தை வனிதா திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலையில் வனிதா வீட்டிற்கு தனது காதலி மகேஸ்வரி, நண்பர் சூர்யா ஆகியோருடன் வந்த பிரகாஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வனிதா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் குழந்தைகள் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

குழந்தைகள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது, வனிதா மற்றும் கனகராஜ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள  பிரகாஷ், சூர்யா, மகேஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர்.