வேலூர் மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்தவர் கௌரி சங்கர். இவரது மனைவி பவித்ரா(22). இந்த தம்பதியினருக்கு ரம்யா (3), மௌனிகா(1½) என்று இருமகள்கள் இருந்துள்ளனர். கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படவே, பவித்ரா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்த பவித்ரா, நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அவரது இரண்டாவது குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்துள்ளது. இதில் எரிச்சலடைந்த பவித்ரா தனது துப்பட்டாவால் குழந்தையின் வாயை மூடி அமுக்கியுள்ளார். இதனால் மூச்சு திணறிய குழந்தை மௌனிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தை பேச்சு மூச்சின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவித்ரா, உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு திடிரென்று குழந்தை  மயக்கமடைந்ததாக கூறியிருக்கிறார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர். பவித்ரா மீது சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் பவித்ராவை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது வேலைக்கு சென்று விட்டு களைப்பாக வீட்டிற்கு வந்தபோது குழந்தை அழுதுகொண்டே இருந்ததாகவும் அதில் எரிச்சலடைந்து துணியால் குழந்தையின் முகத்தை மூடியதாக தெரிவித்துள்ளார். தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் பவித்ராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.