கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்து இருக்கிறது நல்லாம்பாளையம் கிராமம். இங்கு திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கௌரி(33). இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி(13) என்கிற மகளும், ப்ரனேஷ் (11) மகளும் இருந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் மாற்று திறனாளிகள். இரண்டு பேருக்கும் காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்திருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் படித்து வந்தனர்.

சிவகுமார் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வேலை செல்லாமல் வீட்டில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கௌரி மனவேதனையில் இருந்திருக்கிறார். சம்பவத்தன்றும் சிவகுமார் குடித்து விட்டு தகராறு செய்திருக்கிறார். இதன்காரணமாக வாழ்வில் வெறுப்படைந்த கௌரி தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். தான் இறந்த பிறகு மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனாதையாகி விட கூடாதென நினைத்த அவர், குழந்தைகளையும் கொன்று விட முடி செய்தார்.

அதன்படி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் தானும் ஒரு சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கௌரியின் தாய் பேபி, மகளும் பேரக்குழந்தைகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த காவலர்கள் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மனைவியும் குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்ட விபரம் தெரிந்ததும் சிவகுமார் தலைமறைவாகியுள்ளார். வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.