சொத்து தகராறில், தாயை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன் போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் விருதுநகர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புதூர், சிவன்கோயில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பார்வதி அம்மாள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் நடராஜன், உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். முன்னதாக அவர், வங்கியில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்து வைத்திருந்தார். மேலும், சொந்த வீடு இருந்ததால், பார்வதி அம்மாள் தனியாக வசித்து வந்தார். 

கடந்த சில நாட்களாக பார்வதி அம்மாளின் 2வது மகன் சாமிநாதன், சொந்து மற்றும் வங்கியில் உள்ள பணத்தை பங்கு பிரிக்கும்படி கூறி வந்தார். ஆனால், பார்வதி அம்மாள் அதற்கு சம்மதிக்கவில்லை,. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை சாமிநாதன், தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது பெயருக்கு வீட்டை எழுதி வைக்கும்படி கூறினார். அதற்கு, பார்வதி அம்மாள் சம்மதிக்காததால், கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், மறைத்து வைத்திருந்த அரிவாளால், தாயை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள், பார்வதி அம்மாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 

தகவலறிந்து சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சாமிநானை தேடி வந்தனர். இதற்கிடையில், அவர், தாயை கொலை செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் சரணடைந்தார். சொத்துக்காக பெற்ற தாயை, மகன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் விருதுநகர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.