வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. வயது 23 . இந்த தம்பதியினருக்கு லத்திகா(7), ஹாசினி (3½) ,கீர்த்திகா மற்றும் ஒன்றரை மாதத்தில் பெண் குழந்தை இருந்துள்ளது. வெங்கடேசன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். பிறந்தது அனைத்தும் பெண் குழந்தைகளாகவே இருந்ததால் கணவன் மனைவி இருவரும் ஆண் வாரிசுக்காக ஏங்கியதாக தெரிகிறது. இதனால் சத்யாவும் மனவேதனையில் இருந்திருக்கிறார்.  

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார். 3 வயது நிரம்பிய ஹாசினி மற்றும்  ஒன்றரை வயது பெண் குழந்தைக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார். பின்னர் அந்த பாலை அவரும் குடித்திருக்கிறார். மற்ற குழந்தைகள் வீட்டில் இல்லாததால் அவர்கள் சத்யா கொடுத்த விஷ பாலில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் சத்யா உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால் அவரது 2 பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மேல்பாடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சத்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் சத்யாவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்  சத்யா  கர்ப்பம் தரித்து ஐந்தாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அந்த குழந்தைக்கு இறந்து போன ஹாசினி பெயரை அவர் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.