நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவருடன் சேர்த்து வைக்க வேண்டுமென பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் மாமியார் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டேரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த  தேன்மொழி  என்பவருக்கும்  கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி இருவருக்கும்  திருமணம் நடந்தது .  பதினைந்து நாட்களில்  முருகன் இந்தோனேஷியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். 

இந்நிலையில்  மாமியார் வீட்டில் வசித்துவந்த தேன்மொழி மார்ச் 8 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் .  இந்நிலையில் தேன்மொழியின் மீது சந்தேகப்பட்ட அவரது மாமியார்  தன்னுடைய மகனுடன் குடும்பம் நடத்திய இரண்டு வாரத்தில் எப்படி கர்ப்பமாக்கி இருக்க முடியும் அது என் மகனின் வாரிசு இல்லை என்று  கூறி தேன்மொழியை வீட்டைவிட்டு வெளியேற்றினார் .  இந்நிலையில் மகன் முருகனும் தாய் சொல்வதைப் போலவே கேட்டு மனைவி தேன்மொழி மீது  சந்தேகப்பட்டதுடன் அவருடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்.  இதனால் தேன்மொழி  கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார் . இந்நிலையில்  நவம்பர் மாதம் ஆறாம் தேதி தேன்மொழிக்கு பெண் குழந்தை பிறந்தது .  ஆனால் குழந்தையை முருகன் வீட்டார்   யாரும்  வந்து  பார்க்கவில்லை .  அதேநேரத்தில் தேன்மொழியையும்  முருகன் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் . 

 

இந்நிலையில் கைக்குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த  தென்மொழி இன்று காலை கணவர் வீட்டின் முன்னால் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .  அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர் முருகன்தான் என்னுடைய குழந்தைக்கு அப்பா,  தன்னையும் குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .  டிஎன்ஏ சோதனை செய்தால் அவர்தான் என் குழந்தையின்  தந்தை என்கிற உண்மை தெரியும் என்றார்.  இதுகுறித்து கடையம் போலீசார் தேன்மொழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.