21 கொலை உட்பட 50 வழக்கில் தொடர்புடைய வட சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பிஆர்என். கார்டன் வள்ளுவர் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பாலாஜி என்ற காக்கா தோப்பு பாலாஜி (38). பிராட்வே பகுதியில் உள்ள 9-ம் வகுப்பு வரை படித்துள்ளான். பாலாஜிக்கு சிறு வயதில் இருந்தே ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் பல சண்டைகளில் ஈடுபட்டு காவல் நிலையம் சென்று ஜாமீன் வெளியே வருவார். 

பாலாஜியின் சித்தப்பா துரை வியாசர்பாடியில் ரவுடியாக வலம் வந்தவர். இதனால் பாலாஜி படிப்படியாக காக்கா தோப்பு பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். பிறகு முதன் முதலில் மூலக்கொத்தளம் ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா என்பவரை யுவராஜ், இன்பராஜ் உடன் சேர்ந்து பாலாஜி வெட்டி கொலை செய்தான். இது தான் பாலாஜிக்கு முதல் கொலை. ஒரு கட்டத்தில் யார் பெரியவன் என்ற போட்டியில், தன்னை வளர்த்து விட்ட ரவுடி யுவராஜை பாலாஜி கொடூரமாக வெட்டிக்கொலை செய்தான்.

அதன்பிறகு பாலாஜி தனது பெயருடன் காக்கா தோப்பு  என்ற பெயரை சேர்ந்து கொண்டு பெரிய ரவுடியாக வலம் வந்தான். அப்போது, சிறையில் இருக்கும் போது மற்றொரு ரவுடி குற நடராஜனுடன் பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் மணல் மேடு சங்கருடன் பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்டு டெல்டா மாவட்டங்களில் மணல் மேடு சங்கரின் எதிரிகளான ஆத்தூர் கண்ணையா மற்றும் அவரது மச்சான் ஆதியையும் வெடிகுண்டு வீசி கொலை செய்தான். அதன்பிறகு, யானைகவுனி பகுதியை சேர்ந்த தலித் பாலுவிடம் ஏற்பட்ட தகராறில் கடந்த 2009ம் ஆண்டு தலித் பாலுவின் தம்பியான சதீஷ்யை கிரிக்கெட்  மைதானத்தில் தனது கூட்டாளிகளுடன்  சேர்ந்து பாலாஜி வெட்டி கொலை செய்தான். 

படிப்படியாக வளர்ந்து வந்த பாலாஜி செம்மரக்கடத்தல் தொழிலும் செய்து வந்தான். இதனால் மாதவரத்தில் செம்மரம் கடத்தல் செய்து வந்த மனோஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் பாலாஜி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தான். அதன் மூலம் பல இளம்பெண்கள் மற்றும் நடிகைளுடன் உல்லாச  வாழ்க்கையை நடத்தி வந்தான். இதுவரை காக்கா தோப்பு பாலாஜி மீது தமிழகம் முழுவதும் 21 கொலை வழக்குகள் உள்ளது. இதுதவிர ஆள்கடத்தல், அடிதடி, பணம் கேட்டு மிரட்டல் என 30-க்கும்  மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் வருகின்றன.

இவர் தேடப்படும் குற்றவாளியாக காக்கா தோப்பு பாலாஜி இருந்து வந்தார். இந்நிலையில், இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.