கோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டின், பல்வேறு மாநிலங்களில், லாட்டரி விற்பனை செய்து வருகிறார். இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகவும், வருமான வரி துறைக்கு புகார் வந்தது. 

இதையடுத்து நாடு முழுவதும்  70 இடங்கள்  கடந்த ஏப்ரல்  3 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கோவை, வெள்ளாங்கிணறு பகுதியில் உள்ள, மார்ட்டினுக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனையில், அங்கு ரகசிய அறை அமைத்து, அதில், பணம், நகை மற்றும் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு கட்டில்களுக்கு அடியில், ரகசிய அறை ஏற்படுத்தி, 2,000, 500, 200 ரூபாய் கட்டுகளாக, 8.25 கோடி ரூபாய் மறைத்து வைத்திருந்ததை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர். 

இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக, மார்ட்டினிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள, கணக்கில் வராத பணம், நகை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு சம்மன்  அனுப்பியுள்ளதாக, வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.