துப்பாக்கி முனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: ராஜஸ்தானின் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!
ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 17 வயது சிறுமியை மூன்று பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருந்துகளை வாங்குவதற்காக சென்ற போது, அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்திய மூன்று பேர் வலுக்கட்டாயமாக அவரை மது அருந்த வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அச்சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அந்த மூன்று பேரும் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் தேதியன்று இரவு பாதிக்கப்பட்ட சிறுமி கடத்தப்பட்டதாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கெர்லி காவல் நிலைய ஆய்வாளர் மகாவீர் பிரசாத் கூறியுள்ளார்.
மனோஜ் சைனி, கேதர் சைனி மற்றும் நரேந்திரன் ஆகிய மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடு வருவதாகவும் மகாவீர் பிரசாத் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையானது டிஎஸ்பி கத்துமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்ட-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாஜகவினர் கருமையாக குற்றம் சாட்டினர். அம்மாநில காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் தனக்கே பாதுகாப்பு இல்லை என கூறும் காட்சிகள் வைரலானது.
திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒராண்டு ஆகிறது: அண்ணாமலை காட்டம்!
சட்ட-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கான பாதுகாப்பை முதன்மையாக கொண்டு அம்மாநில தேர்தல் பிரசாரத்தை பாஜக மேற்கொண்டது. அதன் விளைவாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து பாஜக வெற்றியடைந்தது. புதிய முதல்வராக முதன்முறை எம்.எல்.ஏ. பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், அம்மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்கின்றன. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல் அம்மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அம்மாநில பாஜக அரசை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சாடியிருந்தார். மக்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆட்சி ஸ்தம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தெந்த அமைச்சர்களை அணுக வேண்டும் என மக்களுக்கு தெரியாததால் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.